திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி பாராட்டு


திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி பாராட்டு
x
தினத்தந்தி 2 Oct 2017 5:00 AM IST (Updated: 2 Oct 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மும்பை,

திறந்தவெளி கழிவறையற்ற பாரதம் என்ற பிரதமர் மோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவதில் மராட்டிய பா.ஜனதா அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மராட்டிய நகர்ப்புறங்களை திறந்தவெளி கழிப்பிடமற்றவைகளாக அறிவிக்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கழிவறையின் அவசியம் குறித்து நிகழ்ச்சியில் பேசினார். அப்போது திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துவரும் இந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, “நான் டிவியில் வெளியாகும் அமிதாப் பச்சனின் விளம்பரங்களை தொடர்ந்து பார்த்துவருகிறேன். இதில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் நடித்துள்ள சில விளம்பரங்கள் ரசிக்கும் படியாக இருக்கும். பிரபலமான நடிகர் இதுபோன்ற விளம்பரங்களில் இலவசமாக நடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அவருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் அந்த விளம்பரத்தின் மூலமாக தெளிவு பெற்றுள்ளனர்” என்றார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

திறந்தவெளி கழிப்பிடமற்ற நகரம் என்ற அறிவிப்பு வெறும் சடங்கிற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடையாது. மக்களின் மனநிலையில் மாற்றம் வராமல் திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நகரம் என்ற குறிக்கோளை நம்மால் எட்டிப்பிடிக்க முடியாது. இப்போது நம்மிடம் இரட்டிப்பு பொறுப்பு உள்ளது. நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படியான கழிவறைகளை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளோம். இப்போது அந்த கழிவறைகளை மக்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தவேண்டும்.

கழிவறை வசதிகள் இருந்தும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு மக்கள் வெட்கப்படவேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story