கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: குழந்தைகள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: குழந்தைகள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே விபத்தில் சிக்கிய கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மற்றொரு விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசனிப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ஜெனிபர். இந்த தம்பதியின் மகன் அஜய் (வயது 7), மகள் ஆண்ட்ரியா(5). ஜெனிபரின் தம்பி கிறிஸ்டோபர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நல்லூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விடுமுறைக்காக கிறிஸ்டோபர் தனது அக்காவின் குழந்தைகளான அஜய், ஆண்ட்ரியாவை நல்லூருக்கு அழைத்துச்சென்று இருந்தார். பின்னர் நேற்று குழந்தைகளை அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வர முடிவு செய்த கிறிஸ்டோபர், உதவிக்காக தனது நண்பர் சரவணன் (27) என்பவரையும் அழைத்துக் கொண்டார்.

4 பேரும் மோட்டார் சைக்கிளில் அரசனிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். சரவணன் மோட்டார் சைக்கிளை ஓட்ட குழந்தைகளும், கிறிஸ்டோபரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். திருச்சியை அடுத்த மண்டையூர் அருகே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சேப்புலான்தோப்பு என்ற இடத்தில் வரும்போது, காரைக்குடியில் இருந்து வந்த காரும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் காரைக்குடியில் இருந்து வந்த கார் சாலையின் குறுக்காக வந்து நின்றது.

இதை சற்றும் எதிர்பார்க்காத சரவணன் சுதாரிப்பதற்குள், மோட்டார் சைக்கிள் சாலையின் குறுக்காக நின்ற கார் மீது மோதியது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டதில், சரவணன், அஜய், ஆண்ட்ரியா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கிறிஸ்டோபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு, மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த கிறிஸ்டோபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன், அஜய், ஆண்ட்ரியா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரைக்குடியை சேர்ந்த கார் டிரைவர் அஸ்வின்குமார் (28) என்பவரை கைது செய்தனர். மற்றொரு கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

இதேபோல திருவெறும்பூரை அடுத்துள்ள காட்டூர் மலையப்பநகரை சேர்ந்த அபித்அலி மகன் அசார்(24), அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த சையத் மகன் அன்வர்(20), இவர்களது நண்பர் நிசாத்(20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்திலிருந்து, அம்மன்நகர் பிரிவில் திரும்பி காட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிதம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசாரும், அன்வரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோட்டார் சைக்கிளின் நடுவில் உட்கார்ந்து வந்த நிசாத், சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் மற்றும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் அணுகுசாலை அமைக்காததால் தான், இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Related Tags :
Next Story