வரதட்சணை கொடுமை திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வரதட்சணை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு,
இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கணவன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா ஹெப்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேலுஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குலால். இவர் பெங்களூருவில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், உடுப்பி மாவட்டம் நடுப்பால் கிராமத்தைச் சேர்ந்த சுமலதா(வயது 23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது தினேஷ் கேட்ட வரதட்சணையை சுமலதாவின் குடும்பத்தார் கொடுத்தனர். இருப்பினும் அவர்கள் 8 பவுன் நகைகள் குறைவாக கொடுத்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகு சுமலதா, தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
பின்னர் கணவன், மனைவிக்கு இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தினேஷ், சுமலதாவை பேலுஞ்சே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் விட்டிருந்தார். அங்கு சுமலதா, தினேசின் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தினேஷ், சுமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு வரதட்சணை குறித்து கேட்டதாக தெரிகிறது. அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்த தினேசின் பெற்றோர், சுமலதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுமலதா, வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சுமலதாவின் பெற்றோருக்கும், ஹெப்ரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமலதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமலதாவின் பெற்றோர், தங்களது மகளின் சாவுக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்றும், அதனால் அவளுடைய கணவன், மாமியார், மாமனார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி போலீசாரிடம் முறையிட்டனர்.
மேலும் போலீசாரிடம் புகாரும் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சுமலதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் சுமலதாவின் கணவன், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.