டெங்கு பாதிப்பு 700 சதவீதம் அதிகரிப்பு கவர்னர் கிரண்பெடி தகவல்
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 700 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரி, ஜிப்மர், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், நகராட்சி ஆணையர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அதை எதிர்த்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 700 சதவீதம் அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பை தவிர்க்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் டெங்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. டெங்குவை கட்டுப்படுத்தவும் நோயை குணப்படுத்தவும் தேவையான மருந்துகளையும் கூடுதலாக வாங்க நிதித்துறை செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் மோகன்குமார் கூறுகையில், ‘இந்த ஆண்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 2000 பேருக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இங்கு சிகிச்சை பெற்றவர்கள் யாரும் உயிர் இழக்கவில்லை. டெங்கு பாதிப்புக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 260 பேரும், செப்டம்பர் மாதம் 360 பேரும் சிகிச்சை பெற்றனர்’ என்றார்.
கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் கூறுகையில், ‘புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வாரத்திற்கு ஒருநாள் தங்களது வீடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறதா? என வாரத்திற்கு ஒருநாள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்’ என்றார்.