ஆவடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ஆவடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 Oct 2017 3:45 AM IST (Updated: 3 Oct 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியை அடுத்த பொத்தூர், ஸ்ரீசாய் சக்தி நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 34). தச்சு தொழிலாளி. இவரது மனைவி கல்பனா(32).

ஆவடி,

சரவணன் கடந்த மாதம் 24–ந்தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு சென்றார். பின்னர் 26–ந்தேதி அவர் மட்டும் பொத்தூருக்கு திரும்பி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்பனா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கல்பனா இதுபற்றி அருகில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கல்பனாவின் உறவினர் நேற்று காலை சரவணன் வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டு வராண்டாவில் டிவி கேபிள், சரவணனின் வயிற்று பகுதியில் கிடந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* திருவல்லிக்கேணியில் சுரேஷ்(29) என்பவரது வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகை, மடிக்கணினி மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சென்டிரல் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள் ஈடுபட்டனர். தூய்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

* துரைப்பாக்கத்தில் வெற்றி என்பவரது வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து கிண்டி வனசரகர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

* குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றதால், எண்ணூர் காசிகோவில் குப்பத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி கார்த்திக்ராஜா(30) குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* ஐ.சி.எப்.பில் கிரேன் ஆப்பரேட்டராக இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்பிரகாஷ்(21) மெரினாவில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story