நண்பர்களுடன் மகன் மோதல் தகராறை தடுக்க முயன்ற தாய், கல்லால் அடித்துக்கொலை வாலிபர் கைது
நண்பர்களுடன் மகன் மோதலில் ஈடுபடுவதை கண்ட தாயார், தகராறை தடுக்க முயன்ற போது கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர், ஹம்பா(வயது 32), சுன்னா, செய்யான். நண்பர்களான இவர்கள் 4 பேரும் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமத்தில் தங்கி, அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
சுரேந்தரின் தாயார் சத்ரீனா(48), இவர்களுடன் தங்கி இருந்து, 4 பேருக்கும் உணவு சமைத்து கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சுரேந்தர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
நண்பர்களுடன் தனது மகன் மோதலில் ஈடுபட்டு இருப்பதை கண்ட சுரேந்தரின் தாயார் சத்ரீனா, தகராறை தடுக்க முயன்றார். அப்போது போதையில் இருந்த 4 பேரும் சேர்ந்து அவரது தலையில் கல்லால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த சத்ரீனா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார், கொலையான சத்ரீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹம்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேந்தர் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.