தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி


தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தீபாவளிக்கு பெங்களூருவில் ஜவுளி எடுத்துவிட்டு சேலம் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

தர்மபுரி,

சேலம் கிச்சிப்பாளையம் தேவந்திரபுரம் 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய குடும்பத்தினர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அசோகன் குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதற்காக ஒரு காரில் பெங்களூருவிற்கு சென்றனர். காரை ரவிக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். ஜவுளி வாங்கிக்கொண்டு அவர்கள் மீண்டும் சேலத்திற்கு புறப்பட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது. அதை முந்தி செல்ல முயன்ற கார் எதிர் பாராதவிதமாக லாரியின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் அசோகனின் மனைவி சித்ரா (வயது 52), அவருடைய மகன் அர்ச்சுனன் (32), அசோகனின் தம்பி காளியப்பபிள்ளையின் மகன் கண்ணன் (40, இவர் பழனியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர்) ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கண்ணனின் மனைவி பத்மாவதி (26), மகன் அஸ்வின் (6), மகள் தன்யா (5), புவனேஸ்வரி (37), சரஸ்வதி (48), கோகுல்விஜய் (12), ரம்யா (23), ஜனார்த்தனன் (9) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். கார் டிரைவர் ரவிக்குமார் (54) லேசான காயமடைந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிறுமி தன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரி, காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.

காயமடைந்தவர்களில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களின் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். விபத்து தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story