ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமாத்துறையினர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை


ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமாத்துறையினர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமாத்துறையினர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூரில் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிபாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமாத்துறையினர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. சினிமாவின் கவர்ச்சி மட்டுமே தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மூலதனமாக இருக்கக்கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலுக்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், சிகிச்சையை பார்வையிட வந்த எய்ம்ஸ் டாக்டர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

சமூகநீதிக்கான ஒரே அடிப்படை இடஒதுக்கீடு முறையாகும். கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கிறது. அதன்மூலம் இட ஒதுக்கீட்டு முறை முற்றிலும் பயனற்று போகும். சமூக நீதியை தவறவிட்டால் அடுத்த தலைமுறையினர் அடிமை வாழ்க்கையை வாழ நேரிடும். எனவே இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

உயர்கல்வி கற்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே கல்வி உதவித்தொகையை தமிழக அரசு மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story