தமிழகத்தில் பூசாரிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும் வேதாந்தம்ஜி பேட்டி


தமிழகத்தில் பூசாரிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும் வேதாந்தம்ஜி பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2017 4:15 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பூசாரிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி கூறினார்.

திருச்சி,

கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூக்கட்டுவோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் டாக்டர் கிரிஜா சேஷாத்ரி, திருச்சி மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தஞ்சை மண்டல தலைவர் சேயோன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நலவாரியம்

கூட்டத்தில், பூசாரிகளின் ஓய்வூதியத்திற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் பசு மாடுகளை கோவில் பூசாரிகளுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பூ கட்டும் தொழில் செய்பவர்களுக்கும், அருள்வாக்கு சொல்வோருக்கும் நலவாரியம் அமைத்து நலவாரிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் வரவேற்றார். முடிவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் நடராஜன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிராம அமைப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊக்கத்தொகை

பின்னர் வேதாந்தம்ஜி, நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பவர்கள் கிராம பூசாரிகள். இவர்கள் தற்போது மிகவும் வறுமையில் உள்ளனர். மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரக்கோணம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்குவதோடு நலவாரிய சலுகைகள் தொடர்ந்து வழங்கவும், பூசாரிகள் நலவாரிய சலுகைகளை மற்ற சமூக சலுகைகளுக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அவருடைய தேர்தல் வாக்குறுதியை ஜெயலலிதாவின் வழித்தடத்தில் ஆட்சி நடத்தும் இந்நாள் முதல்- அமைச்சர் உடனடியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தெலுங்கானாவில் பூசாரிகளுக்கு சம்பளம் வழங்குவது போல் தமிழகத்தில் உள்ள பூசாரிகளுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். நாகர்கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி இளைஞர்கள் எழுச்சி மாநாடு மற்றும் மகளிர் மாநாடும், 28-ந் தேதி பூசாரிகள் மாநாடும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர், மாநில முதல் -அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story