மகாத்மாவை மறந்த அதிகாரிகள் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்


மகாத்மாவை மறந்த அதிகாரிகள் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியை அதிகாரிகள் மறந்ததால், சமூக ஆர்வலர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் மார்பு அளவு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று காந்தியின் பிறந்தநாளான நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஆணையாளர் அல்லது அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் காந்தியை கண்டு கொள்ளவில்லை. இதனால் மகாத்மாவுக்கு மரியாதை செலுத்துவதில் சத்திய சோதனை ஏற்பட்டது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மனவேதனை அடைந்தனர்.

இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவரான சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் குமரேசன், பொருளாளர் லிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அய்யல்ராஜ் தலைமையில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொன்மனோகரன் மகாத்மா சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், இளைஞரணி பொறுப்பாளர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story