காலில் வெட்டுக்காயத்துடன் சென்ற தமிழக தொழிலாளிக்கு கேரள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு


காலில் வெட்டுக்காயத்துடன் சென்ற தமிழக தொழிலாளிக்கு கேரள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

காலில் வெட்டுக்காயத்துடன் சென்ற தமிழக தொழிலாளிக்கு கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மறுத்தனர். அவருக்கு தற்போது கோவையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் வட்டம் கார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (38). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரனின் மாமனார் அன்பழகன், அதே பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன் (31), சங்கர் (49) ஆகிய 3 பேருடன் ராஜேந்திரன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

கடந்த 30-ந் தேதி ராஜேந்திரன் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கோடீஸ்வரன் திருடியதாக கூறப் படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து ராஜேந்திரனின் கால் மற்றும் கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காலின் பாதப்பகுதியில் பலத்த காயமடைந்து கால் தொங்கிய நிலையில் இருந்தது. இதனால் ராஜேந்திரனை, அன்பழகன், சங்கர் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக குட்டிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கால் தொங்கிய நிலையில் உள்ளதால் இங்கு அதற்கான சிகிச்சை அளிக்க முடியாது. திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

உடனே அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் காலில் பலத்த காயம் இருப்பதால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்றும் கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கும் சிகிச்சை முறைகள் இல்லை என்று கூறி தட்டிக்கழித்ததாக தெரிகிறது. இதற்கிடையில் ராஜேந்திரனின் காலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். உடனே அவரை அதே ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

அவரை பாலக்காடு அருகே சென்றபோது ராஜேந்திரனின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றது எனவே ராஜேந்திரனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அன்பழகன், சங்கர் ஆகியோர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலை 11.30 மணி யளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜேந்திரனுக்கு காலில் வெட்டுக்காயத்துடன் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 370 கிலோ மீட்டர் தூரம் குட்டிபுரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் அலைந்து திரிந்து உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜேந்திரனுக்கு கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த ஒரு சாலைவிபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கும் கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தமிழக தொழிலாளிக்கு கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளுக்கு எந்தவித பாகுபாடுமின்றி சிகிச்சை அளித்து வருகிறோம்.

இந்தநிலையில் கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் தமிழகத் தை சேர்ந்த தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக வருபவர் யாராக இருந்தாலும் டாக்டர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவது அவசியம்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள ராஜேந்திரனுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.


Related Tags :
Next Story