புனேயில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை
புனேயில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புனே,
புனே தானோரி சாலையில் உள்ள அம்பாநகரி அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ராதா மாதவன் நாயர் (வயது71). சம்பவத்தன்று தாயை பார்ப்பதற்காக அவரது மகள் வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ராதா மாதவன் நாயர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள் தாயை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையின் போது, ராதா மாதவன் நாயர் அணிந்திருந்த தங்க வளையல்கள் மற்றும் சங்கிலி காணாமல் போயிருந்தன.
இதன் மூலம் மர்மஆசாமிகள் அவரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.
போலீசார் கட்டிட வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்வையிட்டனர். இதில் தொப்பி அணிந்த 2 பேர் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்களே கொலையாளிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.