நெல்லையில் நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டம்


நெல்லையில் நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:32 AM IST (Updated: 3 Oct 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாத சீட்டு பணம் வசூலித்து நகை கொடுக்கவில்லை என்று கூறி வாடிக்கையாளர்கள் நேற்று நகைக்கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் வாடிக்கையாளர்களிடம் மாதாந்திர சீட்டு நடத்தி பணம் வசூலித்து வந்தனர். 6 மாதங்கள் மற்றும் ஓராண்டு திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி முடித்த உடன் அந்த பணத்துக்கு இணையான தங்க நகை கொடுத்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சீட்டு பணம் செலுத்தி முதிர்வு ஆன வாடிக்கையாளர்களுக்கு அந்த நகைக்கடை நிர்வாகம் நகை கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கு வந்து முற்றுகையிட்டு சீட்டுப்பணத்துக்கு உரிய நகையை தருமாறு கேட்டனர். இதையடுத்து ஒருசில வாடிக்கையாளர்களுக்கு சீட்டு பணத்துக்கு உரிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் நேற்று நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட நகைக்கடையை முற்றுகையிட்டனர். அப்போது தாங்கள் செலுத்திய சீட்டு பணத்துக்கு உரிய நகை தரவேண்டும் இல்லை என்றால் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென்று ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாடிக்கையாளர்கள், நகைக்கடை பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சீட்டு பணத்துக்கு உரிய நகையை தரவில்லை என்று கூறினர். இதையடுத்து போலீசார், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து வாடிக்கையாளர்கள் மறியலை கைவிட்டு, புகார் கொடுக்கச் சென்றனர்.

மேலும் சீட்டுப்பணம் செலுத்தியது மற்றும் நகை வழங்குவது தொடர்பாக நகைக்கடை நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஸ்ரீபுரம் பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


Next Story