புனேயில் உயிரிழந்த புளியம்பட்டி ராணுவ வீரரின் உடல் இன்று அடக்கம்
புனேயில் உயிர் இழந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேல பூவாணி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் சிங்கராஜ் (வயது 38) என்ற மகன் உள்ளார். இவர் தனது 20 வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.
இவருக்கு திருமணமாகி ரேகா (34) என்ற மனைவியும், 4 வயதில் ஆஜித்ராஜ் என்ற மகனும், 2 வயதில் ஜோஸ்லின் மேரி என்ற மகளும் உள்ளனர். சிங்கராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று புனேயில் 11–வது பட்டாலியனில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சிங்கராஜ் ராணுவ முகாமில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராணுவ வாகனத்தில் வெளியே புறப்பட்டாராம். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் கதவு திறந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள், சிங்கராஜின் மனைவி ரேகாவிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் சிங்கராஜின் உடல் புனேயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் நேற்று இரவு 9.40 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பபட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ மரியாதையுடன் சிங்கராஜின் உடல் அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேல பூவாணி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை பார்த்து ரேகாவும் அவரின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் கதறி அழுதனர். தற்போது சிங்கராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவருடைய உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மேல பூவாணி கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.
சிங்கராஜ் தனக்கு பதவி உயர்வு கிடைத்த பின்னர் விடுமுறையில் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களை பார்ப்பதற்காக சொந்த ஊரான மேல பூவாணிக்கு வந்தார். அவர் 45 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்து விட்டு, கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்துள்ளார். அதற்குள் சிங்கராஜ் விபத்தில் பலியான சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.