முகப்பேரில் சாலை விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சாவு
முகப்பேரில் நடந்த சாலை விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை முகப்பேர் மேற்கு ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயபாபு (வயது 42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும், அ.தி.மு.க. (தினகரன் அணி) திருவள்ளூர் கிழக்கு அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். நேற்று விஜயபாபு அம்பத்தூரில் இருந்து தனது காரில் முகப்பேர் வீட்டிற்கு வாவின் சாலை 2–வது ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லோடு வேனில் மோதியது.
பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் மோதிய கார் அருகிலுள்ள டெலிபோன் இணைப்பு ஜங்ஷனில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த விஜயபாபு காரில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விஜயபாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.