நெரிசலில் சிக்கி 23 பேர் பலி எதிரொலி ரெயில் நிலையங்களை ஆய்வு செய்ய 13 குழு
ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்ய 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மும்பை,
மும்பையில் பரேல், எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைபாதையில் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள் பற்றி ஆய்வு செய்ய சிறப்புகுழுவை அமைக்க ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்களுக்கு உத்தரவிட்டார்.
ரெயில்வே மந்திரியின் இந்த உத்தரவை தொடர்ந்து, மத்திய ரெயில்வே தனது மெயின், துறைமுகம் மற்றும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் உள்ள 76 ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்ய 8 குழுக்களையும், மேற்கு ரெயில்வே சர்ச்கேட் முதல் தகானு வரையில் உள்ள ரெயில் நிலையங்களை ஆய்வு செய்வதற்கு 5 குழுக்களையும் அமைத்து உள்ளது.
இந்த 13 குழுவிலும் ரெயில்வே அதிகாரிகள், மும்பை போலீஸ், ரெயில்வே போலீஸ், மும்பை, தானே, மிராரோடு, வசாய்–விரார் மாநகராட்சிகளின் அலுவலர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த குழு நேற்று தங்கள் ஆய்வு பணியை மேற்கொண்டது. இதுபற்றி மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரெயில் நிலையங்களில் சிறப்பு குழுவினர் காலை மற்றும் மாலை ஆகிய பிரதான நேரங்களில் ஆய்வில் ஈடுபடுவார்கள். அவர்கள் நடைமேம்பாலங்கள், பிளாட்பாரத்தின் அகலம், நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு பிளாட்பாரத்துடன் நடைமேம்பாலத்தை இணைக்கும் படிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து 5 நாளில் அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.
அதன் அடிப்படையில் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.