ஸ்கூட்டர் மீது தமிழக அரசு பஸ் மோதல்: தம்பதி உடல் நசுங்கி சாவு


ஸ்கூட்டர் மீது தமிழக அரசு பஸ் மோதல்: தம்பதி உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 4 Oct 2017 5:45 AM IST (Updated: 4 Oct 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், ஸ்கூட்டர் மீது தமிழக அரசு பஸ் மோதியதில் தம்பதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேம்பாலத்தில் உள்ள பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது விபத்து நிகழ்ந்தது.

பெங்களூரு,

பெங்களூரு ஜே.ஜே.நகரில் உள்ள கோரிபாளையாவில் வசித்து வந்தவர் அந்தோணி ஜோசப் (வயது 55). இவருடைய மனைவி சகாயமேரி (53). இவர்கள் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஸ்கூட்டரில் மைசூரு ரோடு மேம்பாலத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த தம்பதியுடன் அவர்களின் 3 வயது பேத்தியும் இருந்தாள். ஸ்கூட்டரை அந்தோணி ஜோசப் ஓட்டினார்.

அப்போது மேம்பாலத்தில் பள்ளம் இருப்பதை அந்தோணி ஜோசப் பார்த்தார். இதனால், அவர் தனது ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்து, பள்ளத்தில் ஸ்கூட்டர் இறங்கி செல்லாமல் இருக்க முயற்சித்தார். இந்த வேளையில், மேம்பாலத்தில் ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த தமிழக அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதனால், ஸ்கூட்டரில் இருந்த 3 பேரும் கீழே தவறி விழுந்தனர். அப்போது, அந்தோணி ஜோசப்-சகாயமேரி தம்பதியின் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால், அவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்தபோது சகாயமேரியின் கையில் இருந்த அவருடைய பேத்தி தனியாக விழுந்ததால் லேசான காயங்களுடன் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தாள்.

இதற்கிடையே, தமிழக அரசு பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிக்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்துபோன தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிறுமிக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய தமிழக அரசு பஸ், விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் சிக்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு பஸ் டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்தவுடன் சாம்ராஜ்பேட்டை எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான், அந்தோணி ஜோசப்-சகாயமேரி தம்பதியின் வீட்டுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அந்தோணி ஜோசப்-சகாயமேரி தம்பதியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன், நிவாரணம் வழங்கும்படி மாநகராட்சி நிர்வாகத்திடமும் பேசியதாக அவர் தெரிவித்தார்.

10 நாட்களில் சாலை பள்ளங்கள் சரிசெய்யப்படும்

மைசூரு ரோடு மேம்பாலத்தில் இருந்த பள்ளத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் தான் அந்தோணி ஜோசப்-சகாய மேரி தம்பதி இறந்ததாகவும் அவர்களின் உறவினர்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்துக்கு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் சென்று பார்வையிட்டனர். மேலும், மேம்பாலத்தில் உள்ள பள்ளத்தை மூடும்படி மேயர் சம்பத்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கான்கிரீட் கலவை கொண்டு அந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தை தொடர்ந்து நேற்று மட்டும் அந்த மேம்பாலத்தில் உள்ள பள்ளத்தால் 2 மோட்டார் சைக்கிள்கள் விபத்தை சந்தித்தன. இந்த விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. மாறாக, மோட்டார் சைக்கிள்களில் சென்ற 2 பேர் காயங்கள் அடைந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் எல்லையில் உள்ள மேம்பாலம் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மூடுவது குறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், ‘தமிழக அரசு பஸ் வேகமாக வந்தது தான் விபத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

பெங்களூரு நகரில் சாலையில் உள்ள பள்ளங்களை மூடும் பணிகள் தொடங்கின. தொடர்ச்சியாக மழை பெய்ததால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் உடனடியாக சாலை, மேம்பாலங்களில் உள்ள பள்ளங்கள் மூடும் பணி தொடங்கப்படும். இன்னும் 10 நாட்களில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகளில் உள்ள பள்ளங்கள் அனைத்தும் சரிசெய்யப்படும்‘ என்றார்.

Next Story