நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் வந்தனர். அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமையில் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தமிழக அரசு கல்வி உதவித்தொகையை குறைப்பதற்கு சட்டமன்ற ஒப்புதலோ, அமைச்சரவையின் ஒப்புதலோ பெறவில்லை. ஆனால் ஆதிதிராவிட நலத்துறை அரசாணையின் கீழ் இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை குறைத்து ஆணையிட்டுள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிக்கும் 1½ லட்சம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சுயஉதவி கல்லூரிகளில் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை முழுமையாக வழங்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். கல்வி கட்டண குழு இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. அதன்படி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட தொகையை வழங்காமல், தற்போது ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டின்படி வழங்கப்பட்டு வந்த ரூ.70 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு விடுதியும், உணவும் கூடுதலாக கல்லூரி தாளாளர்கள் வழங்கி வந்தனர். கல்வி உதவித்தொகை குறைப்பால் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பார்கள். எனவே கல்வி உதவித்தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

Related Tags :
Next Story