அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் கண்டறிவதில் சிக்கல் நோயாளிகள் தவிப்பு


அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் கண்டறிவதில் சிக்கல் நோயாளிகள் தவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

கடலூர்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் காலையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைபெற வருபவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் ரத்த பரிசோதனை மூலம் இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

தற்போது அரசு தலைமை மருத்துவமனையில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு டெங்கு அறிகுறிகள் இருக்கிறதா என கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயை கண்டறிவதற்கு பயன்படும் ரசாயனத்தில் ஒன்றான என்.எஸ்.1 என்கிற வகை ரசாயனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை மேற்கொள்ள வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் கூறும்போது, நான் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறேன். இன்று(நேற்று) எனது உடலை பரிசோதனை செய்த டாக்டர் ரத்தபரிசோதனைக்கு பரிந்துரை செய்தார். உடனே நான் டாக்டர் குறித்து தந்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு கண் மருத்துவமனை அருகில் உள்ள ஆய்வு கூடத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு இருந்த ஊழியர் ஒருவர் ரத்த பரிசோதனை செய்வதற்கான என்.எஸ்.1 என்ற ரசாயன திரவம் இல்லை என்றார்.

இதனால் ரத்த பரிசோதனைக்காக தனியார் ஆய்வு கூடத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் டெங்கு காய்ச்சல் நோயை கண்டறிவதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பு உள்ளது என கூறுகிறார்கள். கடலூர் அரசு மருத்துவமனை மட்டும் இதற்கு விதிவிலக்கோ என்னவோ தெரியவில்லை. வெளியில் உள்ள தனியார் ஆய்வு கூடங்களில் சென்று விசாரித்தால் ரத்த பரிசோதனைக்கு ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. என்னை போன்று அனைத்து நோயாளிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என்றார் அவர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு தனித்தனி வார்டுகள் உள்ளன. தற்போது உள் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நோயால் அல்லல் பட்டு வரும் நோயாளிகள் கொசுக் கடி, கடும் குளிர் போன்ற அவதியை கூடுதலாக அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story