ஊழியர் தற்கொலை விவகாரம்: பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி உதவி வேளாண் அலுவலர்கள் மனு


ஊழியர் தற்கொலை விவகாரம்: பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி உதவி வேளாண் அலுவலர்கள் மனு
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் துறை ஊழியர் அமுதன் தற்கொலை விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் அலுவலர்கள் மனு கொடுத்தனர். பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர்கள், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலரான பணிபுரிந்து வந்த ஊழியர் அமுதன் தற்கொலையானது, வேளாண்மைத் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் மன வருத்தத்தை மட்டும் அல்லாமல் ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. வேளாண்மைத்துறையில் பணிபுரியும் எந்த நிலை அலுவலர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கடைசியில் உதவி வேளாண்மை அலுவலர்களே பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

களப்பணிக்கு போதிய அலுவலர்கள் இல்லாத நிலையில், உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்கப்படு கிறது. குறிப்பாக கூடுதல் பொறுப்பு பணிகள் வட்டாரம் மற்றும் கிராம அளவில் வழங்குதல், உதவி விதை அலுவலர் பணி, கிடங்கு மேலாளர் பணி, கம்ப்யூட்டர் உள்ளட்டு பணி போன்ற பணிகளை கூடுதலாக வழங்குவதுடன் அவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கையும் அடைய நிர்ப்பந்தப்படுத்துவதால் மிகுந்த பணிச்சுமையால் தற்கொலை போன்ற நிகழ்வுகள் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்தநிலையை மாற்றி துரித மேல் நடவடிக்கை மேற்கொண்டு பணிச்சுமையையும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்திருந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story