நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள்- காய்கறி சந்தையில் விஜயகுமார் எம்.பி. திடீர் ஆய்வு


நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள்- காய்கறி சந்தையில் விஜயகுமார் எம்.பி. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Oct 2017 4:15 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள் மற்றும் காய்கறி சந்தையில் விஜயகுமார் எம்.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு நேற்று காலை குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகள் ஓய்வு எடுக்க அமைக்கப்பட்டு வரும் குளிரூட்டப்பட்ட அறை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

இதேபோல் வடசேரி பஸ் நிலையத்தையும் ஆய்வு செய்தார். அப்பகுதியில் அமைய உள்ள அம்மா திருமண மண்டபத்துக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். பின்னர் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள உணவுகள் தரமாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தார்.

மின் இணைப்பு

அதன்பிறகு வடசேரி கனகமூலம் சந்தைக்கு சென்ற அவர், அங்கு குவிந்து கிடந்த குப்பைகளையும், தற்காலிக கடைகள் இடிக்கப்பட்டு இடிபாடுகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்ததையும் பார்வையிட்டார். உடனே அவற்றை அகற்ற நகராட்சி ஆணையர் சரவணகுமார், என்ஜினீயர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டார். உடனே அதிகாரிகள் அவற்றை அகற்றுவதற்கான பணிகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் தொடங்கினர்.

இந்த ஆய்வின்போது சந்தை வியாபாரிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளுக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படாததால் அது செயல்படாமல் இருப்பதாக தெரிவித்தனர். உடனே விஜயகுமார் எம்.பி. செல்போன் மூலமாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உயர்கோபுர மின்விளக்குக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், நகர செயலாளர் சந்திரன் மற்றும் பலர் உடன் சென்றனர். 

Related Tags :
Next Story