அரசு பணிகளில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை நாராயணசாமி ஆவேசம்
புதுவை அரசு பணிகளில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆவேசத்துடன் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தை சேர்ந்த மாகி பகுதி மிகவும் சுத்தமான பகுதியாக அகில இந்திய அளவில் தேர்வாகி உள்ளது. புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களையும் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மழைக்காலம் தொடங்கும் முன்பே கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய உள்ளோம்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்து பேசினேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பே டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளோம். இதற்கு தேவையான மருந்துகள், உபகரணங்களும் தரப்பட்டுள்ளது. அரசின் எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டம் நடத்த உள்ளோம்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. தனியார் ஆஸ்பத்திரியில் மட்டும் 2 பேர் இறந்துள்ளனர். சென்னை சென்று படிக்கும் மாணவர்களும் புதுவையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை சிலர் பூதாகரமாக்கி 700 சதவீதம் டெங்கு பாதிப்பு அதிகமாகி உள்ளது என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.
கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் அரசில் 2 படகுகள் வாங்கியதில் தவறு நடந்ததாகவும், இதுதொடர்பாக புகார் மத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு அதுதொடர்பாக தலைமை செயலாளர் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. மாநில அரசின் அனுமதியை பெறாமல் டெல்லிக்கு கடிதம் அனுப்பியது விதிமுறை மீறிய செயலாகும்.
ஏதேனும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், செயலாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அன்றாட அரசுப்பணிகளை கண்காணிப்பது முதல்–அமைச்சர், அமைச்சர்களின் கடமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. படகு வாங்க டெண்டர் விடுவது நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயம். இதில் தவறு நடந்தால் அதுதொடர்பான விசாரணைக்கு மத்திய லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அனுப்பும் முன்பு கவர்னர் எங்களுக்கு அனுப்பியிருக்கவேண்டும்.
எதற்கெடுத்தாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் கவர்னர் விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். இதுதொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்புதுறைக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
அப்போது உடனிருந்த அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.24 கோடியை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் 2 முறை முடிவெடுத்து கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். விவசாயிகளுக்கு இந்த அரசு மூலம் எதுவும் செய்யக்கூடாது என்று அவர் நினைக்கிறார். அவரது நோக்கம் எங்களுக்கு தெளிவாக தெரிகிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் மத்திய மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோதுதான் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அப்படியிருந்தும் கோப்புகளை மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பினால் அதற்கு என்ன அர்த்தம்?
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
பேட்டியின்போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.