விண்வெளி சூறாவளியும் அதன் பாதிப்புகளும்!


விண்வெளி சூறாவளியும் அதன் பாதிப்புகளும்!
x
தினத்தந்தி 4 Oct 2017 3:22 PM IST (Updated: 4 Oct 2017 3:22 PM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான பருவநிலை மாற்றங்கள் தொடர்பான புரிதல் மற்றும் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் உலக மக்களிடையே ஒற்றுமை இல்லை.

மிக ஆபத்தான பருவநிலை மாற்றங்கள் தொடர்ந்து வெகுவேகமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்று ஒரு சாராரும், அப்படி எதுவும் நிகழவில்லை, அது தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் சித்தரிக்கப்படுபவை என்று மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருவெள்ள பாதிப்புகளும், அதிகபட்சமாக 300 கிலோமீட்டர் வேகம் வரை காற்றை சுழற்றி அடிக்கும் சூறாவளி மற்றும் புயல்களும் சமீப காலங்களில் அதிகரித்து வருவது கண்கூடு.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, இம்மாதிரியான பேராபத்துகளை பல நாட்கள் முதல் மாதங்களுக்கு முன்னரே தாக்கக்கூடிய இடங்கள் மற்றும் வேகம் உள்ளிட்ட பல தகவல்களை மனிதர்கள் விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்கள் மிகத்துல்லியமாக காட்டிவிடுகின்றன.

அதனால் சூறாவளிகளால் ஏற்படும் உயிர்பலிகள் மற்றும் பொருட்சேதங்கள் ஆகியவற்றை வெகுவாக குறைக்கும் நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடிகிறது.

துரதிர்ஷ்டவசமாக, சூரியனால் உருவாக்கப்படும் சூரிய புயல்கள் (solar winds) ‘விண்வெளி சூறாவளி (space hurricanes) எனும் ஒருவகையான சூறாவளியை ஏற்படுத்துகிறது என்றும், விண்வெளி சூறாவளிகள் ‘பிளாஸ்மா’ எனப்படும் வெப்பக்குழம்புகளை பூமியை நோக்கி தள்ளுவதால் விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் பாதிப்புக்குள்ளாகி செயலிழந்து போகும் ஆபத்து இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனில் வெளியாகும் கதிர்கள் பூமியைத் தாக்குவதற்கு முன்பே பூமியின் காந்தக்கோளம் (magnetosphere) அதனைத் தடுத்துவிடுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விண்வெளி சூறாவளிகளால் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றல் காந்தக்கோளத்துக்குள் புகுந்துவிடுகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையாமை (KelvinHelmholtz (KH) instability) எனப்படும் இயற்பியல் நிகழ்வுதான் காரணம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வெவ்வேறு திரவங்கள் அல்லது வாயுக்கள் வெவ்வேறு வேகத்தில் விழுந்து ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்வதாலேயே ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையாமை நிகழ்வு ஏற்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக, நீர்ப்பரப்பின் மீது காற்று பலமாக அடிக்கும்போது இந்த நிகழ்வு ஏற்படும்.

முக்கியமாக, சூரிய புயல்கள் கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் அலை அல்லது விண்வெளி சூறாவளிகள் மூலமாகவே பெரும்பாலும் வெப்ப ஆற்றலை காந்தக்கோளத்துக்குள் கடத்துகின்றன என்றும், இவற்றின் தன்மையை புரிந்துகொள்வது நம் செயற்கைக்கோள்களை பாதுகாக்க அவசியம் என்றும் கூறுகிறார் அமெரிக்காவிலுள்ள எம்ப்ரி ரிடுல் ஏரோநாட்டிகல் பல்கலைக்கழகத்தைச் (EmbryRiddle Aeronautical) சேர்ந்த ஆய்வாளர் கதரினா நைகைரி.

மேலும், விண்வெளி சூறாவளிகள் காரணமாக உற்பத்தியாகும் வெப்ப வட்டங்கள் சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் அளவு கொண்டவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சூரிய புயல்களின் உறுதியைப் பொறுத்து விண்வெளி சூறாவளிகளின் அளவும் பெரிதாகும் என்றும், அதன் விளைவாக அதிகப்படியான பிளாஸ்மா காந்தக்கோளத்துக்குள் நுழையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விண்வெளி சூறாவளி மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான அறிவியல் புரிதலை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாக, அவற்றில் இருந்து தப்பித்து பயணிக்கும்படி செயற்கைக்கோள்களை பயிற்றுவிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஜி.பி.எஸ். சிக்னல்கள் முதல் ரேடியோ தகவல் தொடர்பு வரையிலான பல தொழில்நுட்பங்களுக்கு அவசியமான செயற்கைக்கோள்கள் தடையின்றித் தொடர்ந்து செயல்பட விண்வெளி சூறாவளி போன்ற பல விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, இம்மாதத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட சூரியல் புயல் காரணமாக பூமியைவிட சுமார் பத்து மடங்கு பெரிய அளவிலான பிளாஸ்மா வெளியாகியதும், அதனால் பூமியின் ரேடியோ சிக்னல்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, விண்வெளி சூறாவளி குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் நம் செயற்கைக்கோள்களை பாதுகாக்க முடியும் என்பது இந்த ஆய்வு மூலம் தெளிவாகிறது. 

Next Story