நாரணமங்கலம் பாசன கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம மக்கள் புகார் டிராக்டரை பறிமுதல் செய்து தாசில்தார் நடவடிக்கை


நாரணமங்கலம் பாசன கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம மக்கள் புகார் டிராக்டரை பறிமுதல் செய்து தாசில்தார் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தை அடுத்துள்ள நாரணமங்கலம் பாசன கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம மக்கள் தெரிவித்த புகாரின்பேரில் தாசில்தார் டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் நாரணமங்கலம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன கண்மாய் உள்ளது. இந்த கிராம மக்கள் இந்த கண்மாய் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த கண்மாயின் முகப்பு பகுதியில் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் கண்மாயை தூர்வாருவதாக கூறி மணலை எடுத்துச்செல்வதாக அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம், விவசாய துறை அலுவலர்கள், தேவிபட்டினம் போலீஸ் நிலையம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கண்மாயில் வெட்டப்பட்ட மணலை ஏற்றி வந்த டிராக்டரை பிடித்து சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது நாரணமங்கலம் கிராம மக்கள் இந்த கண்மாயை அரசு சார்பில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து வெட்டப்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர். அதன்படி ஜே.சி.பி. உதவியுடன் கண்மாயில் வெட்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது.

இதுபற்றி ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம் கூறும்போது, நாரணமங்கலத்தில் கண்மாய் வெட்டப்பட்டு டிராக்டரில் மணல் கடத்தி செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்துள்ளோம். இந்த கண்மாயை வெட்டுவதற்கு வருவாய்த்துறை மூலம் அனுமதி வழங்கப்படவில்லை. வேறு துறைகள் மூலம் எதுவும் அனுமதி பெற்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.


Next Story