இலங்கை தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்


இலங்கை தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2017 5:45 AM IST (Updated: 5 Oct 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் வலியுறுத்தி உள்ளார்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் அறிவுச்செல்வன். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலாகவும் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதற்காக ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்றார். இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பேசினார்.

பின்னர் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:–

 இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்ற வகையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுமுற்றிலும் தவறான பார்வையாகும். இலங்கையில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை. இலங்கை சிங்கள ராணுவம் தமிழ்மொழி பேசுகிற மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இறந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரும் தமிழர்களே. இடிக்கப்பட்ட கோவில்களும் தேவாலயங்களும் தமிழர்கள் வழிபட்டவைதான். இதேபோல இடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடங்களும் பொதுக்கட்டிடங்களும் தமிழர்களுக்கு சொந்தமானவை. பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் மாணவ–மாணவிகளும் தமிழர்கள். சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து இடங்களும் தமிழர்களின் பூர்வீக இடங்களாகும்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் தமிழர்கள். சொந்த நாட்டில் வாழ வழியற்ற மக்களாய் அகதிகளாக 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதையெல்லாம் ஐ.நா. சபை உற்று நோக்கி திறந்த மனதோடு விசாரித்தால், திட்டமிட்டு இலங்கை ராணுவம் தமிழ்மொழி பேசுகிற மக்கள் மீதும் அவர்களின் கலாச்சார, பொருளாதார, பண்பாடுகளை அழிக்கிற கொடிய செயலை செய்துள்ளது தெளிவாகும். எனவே தான் நாம் தமிழர் கட்சி இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்கிற வகையில் ஐ.நா. சபை விசாரணை நடத்தவேண்டும் என்றும், தமிழ்மொழி பேசுகிற மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ‘ஈழம்‘ வேண்டுமா வேண்டாமா? என்று தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்திய வெளிநாட்டுச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு முகாம்களை மூடவேண்டும் என்றும், அகதிகளாக வருபவர்களை வெளிநாட்டவராக கருதக்கூடாது என்றும் உடனடியாக இந்திய அரசு பன்னாட்டு அகதிகள் குறித்தான சட்டத்தில் கையொப்பமிட வேண்டும். இந்தியாவின் மொழிவழி தேசிய இனங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும் அப்போதுதான் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story