திருச்சி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல்


திருச்சி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி போலீசார் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை,

அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது–

கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி எனது அடையாறு இல்லம் அருகில் நடிகர் செந்தில் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் திருச்சி அ.தி.மு.க. எம்.பி. குமாரை தரக்குறைவாகவும், அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் திருச்சி போலீசில் குமார் எம்.பி. புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடிகர் செந்திலை பேட்டி கொடுக்க தூண்டியதாக என் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த புகார் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அரசியல் உள் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அடிப்படை முகாந்திரம் இல்லாத இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

குமார் எம்.பி. புகாரின்பேரில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே நடிகர் செந்தில் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்டதால் விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை திருச்சி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.


Next Story