கொடைக்கானல் அருகே பஸ் –லாரி நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் படுகாயம்


கொடைக்கானல் அருகே பஸ் –லாரி நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே தனியார் பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் பயணம் செய்த 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகா கவுஞ்சி கிராமத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த சுந்தர் (வயது 38) என்பவர் ஓட்டினார். பஸ்சில் கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். அதே போல் பழனியில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி கவுஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த லாரியை பழனியை சேர்ந்த அம்மாபட்டி (48) என்பவர் ஓட்டி வந்தார். கொடைக்கானல் மேல்மலைப் பாதையில் பூம்பாறை அருகே மகாலட்சுமி கோவில் என்னுமிடத்தில் பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கிளாவரை சேர்ந்த விஸ்வநாதன் (53), மன்னவனூரை சேர்ந்த கிருஷ்ணசாமி (73), முனியம்மாள் (40), கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த பாக்யதாஸ் (44), மேகநாதன் (44), தமிழரசி (50), தனலட்சுமி (36), கோபால் (44), தீபக் (12), கீர்த்திகா (8), ராமச்சந்திரன் (37) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பஸ்சில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அங்கு இருந்து விஸ்வநாதன், கிருஷ்ணசாமி, முனியம்மாள், பாக்யதாஸ் ஆகிய 4 பேர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக கொடைக்கானல் மேல்மலைப் பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்து நடந்த இடத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


Next Story