பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் மேல் மண் வெட்டும் பணிகளில் நிரந்தரதன்மை உள்ள வேலைகளை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும், 3 சுரங்களிலும் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு விடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும், என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான போனஸ், ஊக்க தொகை மற்றும் ஊதிய மாற்று ஒப்பந்தத்திற்கான பேச்சவார்த்தையை தொடங்கிட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்கோசர்வ் சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்கள், பணியின் போது இறந்தவர்களின் வாரிசு, பழகுனர் பயிற்சி முடித்தவர்கள், வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நிரந்தர வேலை வழங்கிட வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுதல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் பணி நாட்கள் கிடைத்திட உத்திரவாதம் அளித்திட வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம், பஞ்சப்படியை அமல் படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கியூ பாலம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
என்.எல்.சி.யில் உள்ள அனைத்து நிரந்தர, ஒப்பந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு நல சங்கங்கள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி சுகுமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க நிர்வாகி மத்தியாஸ், டி.டி.யூ.சி. நிர்வாகி மனோகர், ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க பொது செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஜம்புலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சி.ஐ.டி.யூ. பொது செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன், அலுவலக செயலாளர் குப்புசாமி மற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள், துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் முத்துவேல் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை பெற்று அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.