ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி


ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி,

அவினாசி ஒன்றியம் பாப்பாங்குளம் ஊராட்சி காசிலிங்கம்பாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர். இதைதொடர்ந்து சிறப்பு அனுமதி பெற்று, காசிலிங்கம்பாளையத்தில் நீரூற்று பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் நேற்று காலை புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான ஆயத்தபணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஆழ்குழாய் கிணறு அமைய உள்ள இடத்தின் அருகில் வசிக்கும் குள்ளவேளாந்தோட்டத்தை சேர்ந்த அவினாசியப்பன் (வயது 50) மற்றும் அவருடைய மனைவி குப்புலட்சுமி (45) ஆகியோர் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இங்கு ஆழ்குழாய் அமைத்தால், தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்றும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சேவூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், மகுடேஸ்வரன் போலீசார் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள், அவினாசியப்பன்–குப்புலட்சுமி தம்பதியை சமரசம் செய்தனர். அப்போது, நீங்கள் 7 ஆண்டுக்கு முன்பு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளீர்கள். உங்களுக்கு முறைப்படி மின் இணைப்பு கிடைக்கும். அரசு சார்பில் அமைக்கப்படும் இந்த ஆழ்குழாய் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று கூறினர். ஆனால், நீங்கள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்று குப்புலட்சுமி வாக்குவாதம்செய்தார்.

அதற்கு, எழுத்துபூர்வமாக எதுவும் எழுதி கொடுக்கமுடியாது. அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று போலீசாரும், அதிகாரிகளும் எச்சரித்தனர். இதனால் மனமுடைந்த குப்புலட்சுமி, அங்குள்ள புதர் மறைவில் பிளாஸ்டிக் கேனில் தயாராக வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றியதுடன், அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றி, தீக்குளிக்கும் முயற்சியை போலீசார் தடுத்து, அவரை சமரசம் செய்தனர். இதையடுத்து, அவினாசியப்பனிடம் மீண்டும் அதிகாரிகள் விளக்கம் கூறி உங்களுக்கு மின்இணைப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று வாய்மொழியாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story