தாளவாடி அருகே காட்டாற்று ஓடையில் மூழ்கி நகைக்கடை ஊழியர் சாவு


தாளவாடி அருகே காட்டாற்று ஓடையில் மூழ்கி நகைக்கடை ஊழியர் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2017 3:30 AM IST (Updated: 5 Oct 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே சுற்றுலா வந்த இடத்தில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது காட்டாற்று ஓடையில் மூழ்கி நகைக்கடை ஊழியர் இறந்தார்.

தாளவாடி,

ஈரோடு மாரிமுத்து வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 28). இவர் ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கோபி, அவருடைய நண்பர்களான கார்த்திகேயன், மணிகண்டன், சுரேஷ், அப்துல் சமது ஆகியோருடன் நேற்று முன்தினம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் பகுதிக்கு சுற்றுலா வந்தார். இரவு ஆசனூரை அடுத்த அரேபாளையத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து 5 பேரும் தங்கினர்.

பின்னர் நேற்று காலை அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் பாறைக்குழி என்ற இடத்தில் உள்ள காட்டாற்று ஓடைக்கு குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு கோபி சென்றுவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஓடையில் மூழ்க தொடங்கினார்.

உடனே அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு குளித்து கொண்டிருந்த நண்பர்கள், கோபியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் ஓடை தண்ணீரில் மூழ்கி கோபி இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கோபிக்கு ராதா என்ற மனைவியும், வந்தனா (5) என்ற மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story