வால்பாறையில் பள்ளிக்கூடம், ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானைகள் தொழிலாளர்கள் பீதி
வால்பாறையில் பள்ளிக்கூடம், ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அங்கிருந்து வால்பாறை பகுதிக்குள் நுழைய தொடங்கிவிட்டன. கேரள வனப்பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் பகுதி வழியாக நேற்று முன்தினம் 4 குட்டிகள் உள்பட 11 யானைகள் புகுந்தன.
இந்த யானைகள் பன்னிமேடு எஸ்டேட் சங்கிலிரோடு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சுவரையும், வகுப்பறையின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் வகுப்பறையில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சத்துணவு மையத்தின் கதவையும் உடைத்தன.
பின்னர் அருகில் இருந்த பன்னிமேடு எஸ்டேட் மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன்கடையின் கதவு, ஜன்னலையும், சுவரையும் உடைத்து சேதப்படுத்தியது. அதன்பிறகு அங்கிருந்து நல்லமுடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. வேலு என்பவரின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தி விட்டு அருகிலிருந்த வசந்தா என்பவரின் டீக்கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. அதன்பிறகு அருகில் இருந்த தோட்ட அலவலகத்தின் கதவையும், எஸ்டேட் உரக்கிடங்கின் சுவரையும்,கதவு, ஜன்னலையும் உடைத்து துவம்சம் செய்தன.
பின்னர் அந்த யானைகள் ஆனைமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நசீர் என்பவரின் டீக்கடையை சுவருடன் சேர்த்து உடைத்து கடையிலிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.
காட்டு யானைகளின் பிளிறில் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்த எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த யானைகள் மெதுவாக தாய்முடி எஸ்டேட் பகுதிக்கும், தாய்முடி எஸ்டேட் பகுதிக்கும் இடையே வனப்பகுதிக்குள் முகாமிட்டன.
இதனால் மீண்டும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடும் என்ற பயத்தில் தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வால்பாறை வனப்பகுதிகளுக்கு வர தொடங்கிவிட்டதால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூடுதல் வனத்துறையினரை வாகன வசதியுடன் பணியில் அமர்த்தி காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து சேதங்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:–
எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை பார்க்கும் தொழிலாளர்கள் யானைகளை தொந்தரவு செய்யாமல் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம்.
எஸ்டேட் நிர்வாகத்தினர் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றவேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குள் முழுமையாக எரியவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன்கடைகளில் அதிகளவில் ரேஷன் அரிசிகளை இருப்பு வைக்கவேண்டாம். அன்றாடம் வினியோகம் செய்வதற்கு தேவையான உணவுப்பொருட்களை மட்டும் கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.