சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் மர்ம காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதில் அதிகமாக சிறுவர், சிறுமிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுமிகள் இறந்தனர்.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா, பெயிண்டர். இவருடைய மனைவி அம்மு. இவர்களுடைய மகள் ஷிவானி(வயது 8). இவள் துட்டம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஷிவானியை, பெற்றோர் தாரமங்கலத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். இந்த நிலையில் ஷிவானி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார அதிகாரிகள் துட்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து மேலும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் நித்யா(15). இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து அவள் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அவள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நித்யா நேற்று பரிதாபமாக இறந்தாள்.

மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருபவர் வினய் பிரசாத்(22). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சிறுவர், சிறுமிகள் ஆவர். மேலும் ஒரு படுக்கையில் 3 பேரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி மற்றும் மருத்துவ வசதியை விரிவுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.


Related Tags :
Next Story