டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது


டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என முத்தரசன் கூறினார்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியம் சார்பில் சீனிவாசராவ் நினைவு தின கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்றுவிழா நடைபெற்றது. அதைதொடர்ந்து எட்டுக்குடி கடைத்தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டகுழு உறுப்பினர் தம்புசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் மாசேத்துங் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

தஞ்சை மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் நில பிரபுக்களால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டபோது, அவர்களை எதிர்த்து போராடி வெற்றிபெற்றவர் சீனிவாசராவ் ஆவார். அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் விவசாயிகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைஎடுத்து வருகிறது. வீட்டிற்கு பயன்படுத்தப்படுகிற கியாஸ் சிலிண்டர் மானியத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிகொல்லி மருந்து, விதை ஆகியவற்றின் மானியத்தையும் நீக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் புதிய பொருளாதார கொள்கையை மோடி அரசு வேகமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசு புதிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இப்போதைய அ.தி.மு.க. அரசு அதனை ஏற்று கொள்கிறது. இந்த புதிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சத்துக்குமேல் வருமானம் பெறக்கூடியவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒரேநாடு ஒரே வரி” என்ற திட்டத்தின்கீழ் மத்திய அரசு டீ, காபி உள்பட உணவு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு முயற்சி செய்து வருகிறது.

மத்திய அரசு மொழி மற்றும் மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டகுழு உறுப்பினர் சோமு.இளங்கோ, நிர்வாக குழு உறுப்பினர் செல்லையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story