லாரி மீது கார் மோதி விபத்து: ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், மகள் உள்பட 3 பேர் பலி


லாரி மீது கார் மோதி விபத்து: ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், மகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 Oct 2017 4:45 AM IST (Updated: 5 Oct 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், அவருடைய மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

பரமத்திவேலூர்,

மதுரை பி.என்.டி. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது 62), ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருடைய மனைவி மலர்கொடி(53). இவர்களுக்கு பாக்கியஸ்ரீ (25), ஆனந்தி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இவர்களில் பாக்கிய ஸ்ரீக்கும், பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராம்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மைத்ரேயி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

ரவீந்திரனின் 2-வது மகள் ஆனந்தி ஜெர்மனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக ஜெர்மனி நாட்டுக்கு செல்ல ரவீந்திரனும், அவருடைய மனைவியும் முடிவு செய்தனர். இதையடுத்து மதுரைக்கு வந்திருந்த தனது மூத்த மகள் பாக்கிய ஸ்ரீ மற்றும் பேத்தியை, பெங்களூருவில் உள்ள அவருடைய கணவர் வீட்டில் விட்டு விட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஜெர்மனிக்கு செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து நேற்று அதிகாலையில் ரவீந்திரன், அவருடைய மனைவி மலர்கொடி, மகள் பாக்கிய ஸ்ரீ, பேத்தி மைத்ரேயி ஆகியோர் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரை டிரைவர் அழகுமணிவண்ணன்(40) ஓட்டி வந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கீரம்பூரை அடுத்துள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரின் மீது கார் மோதியது. பின்னர் அந்த கார் சுவரை தாண்டி எதிர்திசையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த டிரைவர் அழகுமணிவண்ணன், ரவீந்திரன், மகள் பாக்கிய ஸ்ரீ ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதே நேரத்தில் காரின் பின் இருக்கையில் பேத்தி மைத்ரேயியுடன் இருந்த மலர்கொடி, பேத்திக்கு எந்தவித அடியும் படாமல் மார்பில் அணைத்து வைத்தபடி இருந்துள்ளார். இதில் மலர்கொடி மட்டும் படுகாயம் அடைந்தார். குழந்தை மைத்ரேயி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார், விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மலர்கொடி நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் உள்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story