ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழ் பெற அண்ணன் மகன் தீபக் முயற்சி
ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழை கோர்ட்டு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு, அவரது அண்ணன் மகன் தீபக்குக்கு கிண்டி தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலந்தூர்,
தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என்றும், எனவே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க தங்களுடைய அனுமதியை பெற வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் ஏற்கனவே கூறி உள்ளனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாரிசு என்று தனக்கு சான்றிதழ் வழங்க கோரி தீபக், சென்னை மயிலாப்பூர் தாசில்தாரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முகவரியில், தான் தியாகராயநகரில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அந்த மனு கிண்டி தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த கிண்டி தாசில்தார், தீபக்குக்கு பதில் அனுப்பி உள்ளார்.
அதில், இறந்தவர்களின் நேரடியான வாரிசுகளுக்குத்தான் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்க முடியும் என்றும், எனவே நீங்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி வாரிசு சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறி உள்ளார்.