ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’
ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’ என்று மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதத்தில் 180 பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகி இருக்கின்றனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:–
ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. ஆனால், அதில் ஒன்றை கூட முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. அரசால் ஒரு சாவையாவது தடுக்க முடிந்ததா? அங்கன்வாடி குழந்தைகளுக்கு வெறும் மைசூரு பருப்பு கொடுக்கிறீர்கள்.
இது போதுமான ஊட்டச்சத்தை அளிக்குமா? அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி எங்கே செல்கிறது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடுகளை பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டுமா?. திட்டங்களை வகுத்துவிட்டதாக தற்பெருமை அடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.