செங்கல் சூளையின் புகை கூண்டு இடிந்து குடிசை மீது விழுந்தது


செங்கல் சூளையின் புகை கூண்டு இடிந்து குடிசை மீது விழுந்தது
x
தினத்தந்தி 5 Oct 2017 5:16 AM IST (Updated: 5 Oct 2017 5:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் பெய்த கனமழையின் போது செங்கல் சூளையின் புகை கூண்டு இடிந்து குடிசை மீது விழுந்ததில் பேரனுடன், தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோலார் தங்கவயல் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை நேற்று அதிகாலை வரை விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் கோலார் தங்கவயல் ஜகாஸ் பகுதியில் உள்ள செங்கல் சூளையின் புகை கூண்டு இடிந்து விழுந்து தொழிலாளர்கள் தங்கியுள்ள குடிசையின் மீது விழுந்தது. இதில் குடிசை இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது அந்த குடிசையில் தங்கி இருந்த செங்கல் சூளை தொழிலாளியான ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த சுகூர் சாப் (வயது 60), அவரது மனைவி பாத்திமா (50) மற்றும் அவர்களது பேரன் நயாஸ் (5) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் ஆண்டர்சன்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு படைவீரர்களும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்களும், போலீசாரும் இறந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல் சூளையின் புகை கூண்டு இடிந்து குடிசை மீது விழுந்ததில் பேரனுடன், தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story