கவுரி லங்கேஷ் கொலையை படமாக்க எதிர்ப்பு
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை படமாக்க எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேசுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த மாதம் (செப்டம்பர்) 5–ந் தேதி அவருடைய வீட்டில் வைத்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். கொலையாளிகளை சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக தேடிவருகிறார்கள்.இதற்கிடையே, கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்த திரைப்பட இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், கவுரி லங்கேஷ் கொலையை திரைப்படமாக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேசுக்கும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கவுரி லங்கேசின் தாய் இந்திரா லங்கேஷ் சார்பில் வக்கீல் சங்கரப்பா நோட்டீசு அனுப்பி உள்ளார்.அதில், கவுரி லங்கேஷ் கொலையை படமாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், கவுரி லங்கேஷ் வாழ்க்கை மற்றும் கொலை தொடர்பாக படம் எடுப்பதாக கூறி அவருடைய பெயரை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்ய கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஏ.எம்.ஆர். ரமேஷ் கூறுகையில், ‘கவுரி லங்கேசை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவரை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. இந்த நோட்டீசுக்கு எனது சட்டகுழு மூலம் பதில் அளிப்பேன்’ என்றார்.
Related Tags :
Next Story