வருகிற சட்டமன்ற தேர்தலில் சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டி


வருகிற சட்டமன்ற தேர்தலில் சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டி
x
தினத்தந்தி 5 Oct 2017 5:27 AM IST (Updated: 5 Oct 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டியிடுவேன் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மைசூரு,

மைசூரு டவுன் ஊட்டஹள்ளியில் உள்ள சந்தே மைதானத்தில் நேற்று சாமுண்டீசுவரி தொகுதி காங்கிரஸ் தொண்டர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

1983–ம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை இந்த தொகுதி மக்கள் தான் சட்டசபைக்கு அனுப்பி வைத்தனர். நான் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து வெளியேறிய பின்பு எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்.

2006–ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த துணை தேர்தல் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய தேர்தலாகும். ஏன் என்றால் பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் சேர்ந்து என்னை தோற்கடிக்க சிரமப்பட்டார்கள். அப்போதும் எனக்கு சாமுண்டீசுவரி தொகுதி மக்கள் கை கொடுத்தனர்.

257 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். 257 க்கு அர்த்தம் உள்ளது. அதாவது அந்த சமயத்தில் நான் 7 தடவை தேர்தலில் போட்டியிட்டு இருந்தேன். அதில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தேன். 2 முறை துணை முதல்–மந்திரியாக இருந்தேன். தேர்தலில் நான் தோல்வி அடைந்து இருந்தால் எனது அரசியல் வாழ்க்கை அப்போதே முடிந்திருக்கும். என் மீது சாமுண்டீசுவரி தொகுதி மக்கள் வைத்திருக்கும் அன்பை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது.

2008–ம் ஆண்டில் சாமுண்டீசுவரி தொகுதி இரண்டாக பிரிந்து வருணா தொகுதி உருவானது. வருணா தொகுதி என்னுடைய சொந்த கிராமமான சித்தராமையனஉண்டிக்கு உட்பட்டதாகும். இதனால் நான் வருணா தொகுதியில் போட்டியிட வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. சாமுண்டீசுவரி தொகுதியை விட்டு கொடுத்தது எனது மனதிற்கு பெரிய வேதனையாக இருந்தது.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) நடக்க உள்ள தேர்தலில் எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டியிட உள்ளேன். அடுத்த சட்டமன்ற தேர்தலை நான் போட்டியிடும் கடைசி தேர்தல். நான் வெற்றி பெற என்னை சாமுண்டீசுவரி தொகுதி மக்கள் ஆசீர்வதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story