குடியாத்தம் அருகே மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு


குடியாத்தம் அருகே மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு
x
தினத்தந்தி 5 Oct 2017 6:04 AM IST (Updated: 5 Oct 2017 6:04 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் பகுதி ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள மொகிலி, கீரமந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காட்டுப்பகுதிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் பெய்த மழை வெள்ளம் குடியாத்தம் ஒன்றியம் தனகொண்டபல்லி – மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கும் இடையே செல்லும் கொட்டாற்றில் கலந்து செல்கிறது.

இந்த கொட்டாறு மோடிகுப்பம், ஆர்.கொல்லப்பல்லி, சேங்குன்றம், தட்டப்பாறை, சீவூர் வழியாக பல கிலோ மீட்டர் கடந்து குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் கவுண்டன்ய மகாநதியில் கலக்கிறது.

மேல்கொல்லப்பல்லி கிராமத்தில் சுமார் 75 வீடுகள் உள்ளன. இதில் 300–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். முழுவதும் விவசாயிகள் நிறைந்த கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பால் ஆகியவற்றையும் கொட்டாற்றை கடந்து தனகொண்டபல்லி கிராமத்திற்கு கொண்டு வர வேண்டும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதேபோல் தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் நிலங்கள் மேல்கொல்லப்பல்லி பகுதியில் உள்ளது. அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அப்பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆந்திர மாநில எல்லையோர பகுதியில் பெய்த தொடர் மழையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து கொட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேல்கொல்லபல்லி கிராமம் தனகொண்டபல்லி கிராமத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெள்ளம் வடிய பலநாட்கள் ஆகும். அதுவரை மாணவர்களும், விவசாயிகளும் கிராமத்தில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியாக மேல்கொல்லப்பல்லியில் இருந்து தனியார் நிலத்தின் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி கொட்டமிட்டார கிராமம் வழியாக தனகொண்டபல்லி கிராமத்திற்கு வர வேண்டும்.

மேல்கொல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இந்த கொட்டாற்றில் பாலம் அமைக்க கோரி எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொட்டாற்றில் வெள்ளம் செல்லும்போது மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டாற்றில் பாலம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story