ஒரே நாள் இரவில் 12 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது


ஒரே நாள் இரவில் 12 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2017 4:45 AM IST (Updated: 6 Oct 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாள் இரவில் 12 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சின்னாண்டி மடம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை, செல்போன் ரீ-சார்ஜ் கடை, டயர் கடை, தீவனம் கடை, மளிகை கடை மற்றும் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பிரதான சாலையில் உள்ள சிறு கடைகள் என மொத்தம் 12 கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடிச்சென்று உள்ளனர்.
இதில் மாணிக்சந்த் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் ரூ.40 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் மடிக்கணினியும் மற்ற 11 கடைகளில் மொத்தம் ரூ.35 ஆயிரமும் திருடு போனது. இது குறித்து, கொள்ளை நடந்த கடைகளின் உரிமையாளர்கள் கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மர்ம ஆசாமிகளை பிடிக்க, புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அன்பழகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தமிழ் நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கொடுங்கையூரில் உள்ள திருவள்ளூர் நகரை சேர்ந்த சாமு (வயது 56), மணிகண்டன் (26), என்பதும், இவர்கள்தான் ஒரே இரவில் கொடுங்கையூர் பகுதியில் உள்ள 12 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story