பெட்ரோல், டீசல் விலையில் கலால் வரி குறைப்பு ‘கடலில் விழுந்த ஒரு துளி போன்றது’
‘‘பெட்ரோல், டீசல் விலையில் கலால் வரியை குறைத்தது, கடலில் விழுந்த ஒரு துளியை போன்றது’’ என்ற உவமையுடன் சிவசேனா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மும்பை,
பெட்ரோல்– டீசல் விலையில் விதிக்கப்படும் கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் மத்திய அரசு குறைத்தது. இதனை விமர்சித்து சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–பாரதீய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.80 மற்றும் ரூ.63–ல் இருந்து குறைந்தபாடில்லை.
எரிபொருள் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் மனரீதியாக தயாராக இல்லை என்று தெரிகிறது. மேலும், எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு நல்ல நாட்களை கொண்டு வந்த அரசு, சாமானிய மக்களுக்கோ கெட்ட நாட்களை கொடுத்துவிட்டது.எரிபொருட்களின் விலையில் விதிக்கப்படும் கலால் வரியை குறைப்பதன் மூலம் வாகன உரிமையாளர்களும், சாமானியர்களும் பயன்பெற்றாலும், இது கடலின் மீது விழுந்த சிறு துளி நீருக்கு ஒப்பானது தான். முதலில் விலையை அதிவேகமாக ஏற்றினார்கள். இதனை கண்டித்து நாடெங்கிலும் பரபரப்பு நிலவவும், பெயரளவுக்கு கலால் வரியை குறைக்கிறார்கள்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story