பள்ளி வகுப்பறையில் ஆசிரியைக்கு கத்திக்குத்து 16 வயது சிறுவன் கைது


பள்ளி வகுப்பறையில் ஆசிரியைக்கு கத்திக்குத்து 16 வயது சிறுவன் கைது
x
தினத்தந்தி 6 Oct 2017 5:30 AM IST (Updated: 6 Oct 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே பள்ளி வகுப்பறையில் ஆசிரியையை கத்தியால் குத்திய முன்னாள் மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் லிட்டில் ஜாக்கி என்ற தனியார் மெட்ரிக்குலே‌ஷன் பள்ளி இயங்கி வருகிறது. 12–ம் வகுப்புவரை உள்ள இந்த பள்ளியில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம்போல் பள்ளியில் வகுப்புகள் தொடங்கின. பள்ளியின் முதல் தளத்தில் உள்ள 9–ம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவர்களுக்கு செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோட்டி என்பவருடைய மகள் ஆசிரியை பூங்கொடி(வயது 27) பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

காலை 10.30 மணியளவில் 16 வயது சிறுவன் ஒருவன் அந்த வகுப்பறைக்குள் வந்தான். ஆசிரியை பூங்கொடி அவனிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அந்த சிறுவன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆசிரியை பூங்கொடியின் முகத்தில் குத்தினான். இதில் ஆசிரியைக்கு இடது கண் புருவம் பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ஆசிரியை அலறினார்.

உடனடியாக அந்த சிறுவன், வகுப்பறையில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றான். அதற்குள் ஆசிரியை பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஆசிரியர்கள், கத்தியுடன் தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கி பிடித்தனர்.

இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று, பிடிபட்ட சிறுவனிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவன், சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவன், கடந்த கல்வி ஆண்டில் அதே பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்து உள்ளான். அவன் சரியாக படிக்கவில்லை என ஆசிரியை பூங்கொடி, அவனை அடித்ததாக கூறப்படுகிறது.

அவன் சரியாக படிக்காததால் பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நிறுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது. அதன்பிறகு அவன், பள்ளி படிப்பை தொடராமல் தற்போது செங்கல்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தன்னை பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பியதற்கு ஆசிரியை பூங்கொடிதான் காரணம் என்று நினைத்த சிறுவன், அவராலேயே தன்னால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனதாக ஏற்பட்ட ஆத்திரத்தில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

முன்னாள் மாணவரால் கத்திக்குத்து காயம் அடைந்த ஆசிரியை பூங்கொடி, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story