விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 50 பேர் காயம்


விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 50 பேர் காயம்
x
தினத்தந்தி 6 Oct 2017 8:00 AM IST (Updated: 6 Oct 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மரகதபுரத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணியளவில் விழுப்புரத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.

விழுப்புரம்,

பஸ்சில் மரகதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். பஸ்சை விழுப்புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் தனசேகரன் ஓட்டினார். கண்டக்டராக ஏழுமலை பணியில் இருந்தார்.

இந்த பஸ், மரகதபுரத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்டியமடை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் வந்தது. இதனால் பஸ்சை, டிரைவர் இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். சிலர் பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை பள்ளி மாணவ- மாணவிகளான மரகதபுரத்தை சேர்ந்த மாதவன் மகள் மகாலட்சுமி (வயது 16), பழனிவேல் மகள் சங்கீதா (15), பழனி மகள் சசிகலா (15), அய்யனார் மகன் பிரேம்குமார் (17), ராமன் மகன் அரவிந்த் (15), அய்யப்பன் மகள் பரமேஸ்வரி (15), கல்லூரி மாணவிகளான மரகதபுரம் மகாலிங்கம் மகள் திவ்யா (20), எரளூரை சேர்ந்த தேவராஜன் மகள் ஷோபா (18), ராமலிங்கம் மகள் ரம்யா (18), ஏழுமலை மகள் உஷா (18), கிருஷ்ணமூர்த்தி மகள் விஜி (18), பழனி மகள் பிரிதா (19) மற்றும் மரகதபுரம் ராமமூர்த்தி மனைவி ருக்குமணி (60), பாண்டுரங்கன் மனைவி சரசு (65), பெருமாள் மகள் நிலா (27), ராமச்சந்திரன் (38), சரவணன் (75), விஷ்ணு (25), லட்சுமணன் (25) உள்பட 50 பேரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story