காய்ச்சலால் மகள் இறந்த செய்தியை கேட்டு சவுதி அரேபியாவில் அதிர்ச்சியில் தந்தை சாவு


காய்ச்சலால் மகள் இறந்த செய்தியை கேட்டு சவுதி அரேபியாவில் அதிர்ச்சியில் தந்தை சாவு
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

காய்ச்சலால் மகள் இறந்த செய்தியை கேட்டு சவுதி அரேபியாவில் அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தையின் உடல் 45 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் வண்டிகார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது58). இவர் கடந்த 15 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவரது மனைவி வள்ளி, மகள் சிந்துஜா (23). இவர் பி.காம். படித்துள்ளார். மகன் கணேஷ் (18) ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிந்துஜா சென்னையில் உள்ள தனது மாமா ராஜேந்திரன் வீட்டில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி சிந்துஜாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மறுநாள் அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகள் இறந்த செய்தியை சவுதி அரேபியாவில் உள்ள தந்தை ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இது குறித்து சவுதி அரேபியாவில் உள்ள ராஜேந்திரனின் நண்பர்கள் சித்திரவேல், செல்வமணி, பன்னீர்செல்வம் ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜேந்திரன் மனைவி வள்ளி. மகன் கணேஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தந்தையும், மகளும் ஒரே நாளில் இறந்த நிலையில் கிராம மக்களே சோகம் அடைந்தனர்.

ராஜேந்திரன் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு காலதாமதம் என்பதால் மகள் சிந்துஜா உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்தநிலையில் 45 நாட்களுக்கு பிறகு ராஜேந்திரனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து ஆம்புலன்சில் நேற்று மாலை திருபுவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ராஜேந்திரன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடந்தது. 

Related Tags :
Next Story