இளம்பெண் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


இளம்பெண் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் அருகே பாலவிடுதி பக்கம் செட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சிவக்குமாருக்கும் வையம்பட்டி அருகே பாம்பாட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த போதும்பொண்ணுக்கும் (வயது 20) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி போதும்பொண்ணு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்களுக்கு சிவக்குமார் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போதும்பொண்ணுவின் பெற்றோர், உறவினர்கள் விரைந்து வந்துபார்த்தனர்.

அப்போது அவரது உடல் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். இதற்கிடையில் பாலவிடுதி போலீசார் விரைந்து வந்து போதும்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூரில் நேற்று முன்தினம் நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்றதால் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று காலை போதும்பொண்ணுவின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. திருமணமான 2½ ஆண்டுகளில் போதும்பொண்ணு மர்மமான முறையில் இறந்ததால் கரூர் உதவி கலெக்டர் சரவணமூர்த்தி விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் இறந்த போதும்பொண்ணுவின் உறவினர்கள் நேற்று மாலை 4.45 மணி அளவில் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போதும்பொண்ணுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கணவர் சிவக்குமார் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், பிருத்விராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் மறியலில் ஈடுபட்டவர்கள் சமாதானமடையாமல் சிவக்குமாரை நேரில் அழைத்து வர வேண்டும் என கூறினர். இதைதொடர்ந்து சிவக்குமாரை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு கரூர் டவுன் போலீஸ் நிலையம் வரவழைத்தனர். இதில் சமாதானமடைந்த பின் மாலை 5.45 மணி அளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகே நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story