நடராஜனுக்கு நடந்த அறுவை சிகிச்சையில் உடல் உறுப்பு மாற்று விதிகள் மீறப்பட்டது விசாரணை நடத்த வேண்டும்


நடராஜனுக்கு நடந்த அறுவை சிகிச்சையில் உடல் உறுப்பு மாற்று விதிகள் மீறப்பட்டது விசாரணை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

நடராஜனுக்கு நடந்த அறுவை சிகிச்சையில் உடல் உறுப்பு மாற்று விதிகள் மீறப்பட்டு இருப்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செம்பட்டு,

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தங்க.ராஜய்யன் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் மூளைச்சாவு அடைந்த ஏழை வாலிபர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில் உடல் உறுப்பு மாற்று விதிகள் கடுமையாக மீறப்பட்டு உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த சந்தேகங்கள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். விசாரிக்கப்பட வேண்டும். ஏழைகளுக்கு இதுபோன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?. ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டால் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைதான் உறுப்பு மாற்று தொடர்பாக முழு உரிமையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த மருத்துவமனையில் உள்ளவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள்.

ஆனால் மிகவும் வறுமையில் வாடிய வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த பின்னர் அவரது உடல் எப்படி சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ‘ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான செலவு தொகையை ஏற்றது யார்? என்பது பற்றி எல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உடல் உறுப்பு மாற்று விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன. ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை முறைப்படி கிடைப்பதில்லை. இதில் தொடர்புடைய டாக்டர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் குடும்பத்தாரிடம் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்படுவதாக கூறி எப்படி ஏமாற்றினார்கள் என்பதும் விசாரிக்கப்படவேண்டிய ஒன்று.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏன் இதுபோன்ற சிகிச்சைக்கு அவசரம் காட்டவில்லை? குறைந்தபட்சம் ஜெயலலிதாவுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் தேவை இருந்ததா, இல்லையா? என்ற செய்தி கூட வெளியிடப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த பிரச்சினையில் உறுப்பு மாற்று வியாபாரத்தை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தான் முதலிடம் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரத்தில், இதில் ஏழைகள் எத்தனை பேர் பயனடைந்து உள்ளனர் என்ற விவரத்தை வெளியிடவேண்டும்.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டாலும், நோயின் வீரியம் அதிகமாக இருக்கிறது. ஒரு தாய் தனது மகளுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால், சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் பணம் கிடைக்காமல் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என்ற சம்பவமும் நடந்துள்ளது. எனவே தமிழக அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி அனைவருக்கும் முறையான சிகிச்சை கிடைக்க வழி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாடுதுறைக்கும், முரளிதரராவ் காரைக்குடிக்கும் காரில் புறப்பட்டு சென்றனர். 

Next Story