அதிக விபத்து நடக்கும் 98 இடங்கள் கண்டுபிடிப்பு வாகனங்களின் வேகத்தை வரையறுக்க நடவடிக்கை


அதிக விபத்து நடக்கும் 98 இடங்கள் கண்டுபிடிப்பு வாகனங்களின் வேகத்தை வரையறுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2017 4:34 AM IST (Updated: 6 Oct 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் 98 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு வாகனங்களின் வேகத்தை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில்தான் அதிக உயிர் பலி ஏற்படுகிறது. இதனால், அங்கு விபத்து ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை வரையறுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இங்கு, திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-கரூர் போன்ற 4 வழிச்சாலைகளில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதுதவிர திண்டுக்கல்- வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு- கொடைக்கானல், பழனி- கொடைக்கானல், திண்டுக்கல்- பழனி, திண்டுக்கல்- நத்தம் ஆகிய சாலைகளிலும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

இவ்வாறு விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் விபத்தை குறைப்பதற்காக ஏற்கனவே 48 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து உள்ளனர். தற்போது, வாகனங்களின் வேகத்தை வரையறுப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் 98 இடங்களில் அதிக விபத்து நடப்பதும், அங்கு நடந்த விபத்துகளில் பலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 98 இடங் களை அதிக விபத்து நடக்கும் பகுதியாக கண்டறிந்து உள்ளோம். தற்போது, வாகனங்களின் வேகத்தை வரையறுக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த 98 இடங்களையும் மிதமான வேகத்தில் வாகனங் கள் செல்ல வேண்டிய பகுதிகளாக அறிவிக்கும்படி கலெக் டருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார். அதன்பிறகு, வாகனங் களின் வேகம் வரையறுக்கப்படும். வாகனங்கள் மித வேகத்தில் செல்ல வேண்டிய பகுதி அரசிதழில் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, அந்த இடங்களில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகத்தின் அளவை குறிக்கும் பொருட்டு சாலையோரங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story