ஆட்டோ மீது வேன் மோதி பள்ளி மாணவி சாவு உறவினர்கள் சாலை மறியல்


ஆட்டோ மீது வேன் மோதி பள்ளி மாணவி சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:36 AM IST (Updated: 6 Oct 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே ஆட்டோ மீது வேன் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே உள்ள கூவனூத்து ஊராட்சி வாலாங்கோட்டையை சேர்ந்தவர் கிட்டுசாமி. அவருடைய மகள் காமாட்சி (வயது 12). இவள், நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே ஊரை சேர்ந்த சாவித்திரி (12), தர்சினி (12), பாண்டியராஜன் (8) மற்றும் சிலர் ஒரு ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

கொம்புகாரன்பட்டி சாலையில், குரும்பபட்டி கிராமத்தின் அருகே ஒரு வளைவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் மில் வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட காமாட்சி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக, நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக இறந்தாள். காயம் அடைந்த சாவித்திரி, தர்ஷினி, பாண்டியராஜன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் காய மின்றி தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காமாட்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் மதுரை-பெரிய குளம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கோபால், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தனியார் மில் நிர்வாகம் மற்றும் வேன் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக நிலக்கோட்டையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சின்னபெருமாளை கைது செய்தனர்.

Next Story