தமிழ்நாட்டை போல் கர்நாடகத்திலும் இடஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்த தீவிர ஆலோசனை


தமிழ்நாட்டை போல் கர்நாடகத்திலும் இடஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்த தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 6 Oct 2017 5:18 AM IST (Updated: 6 Oct 2017 5:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டை போல் கர்நாடகத்திலும் இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்த தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு விதான சவுதா எம்.எல்.ஏ.க்கள் விடுதி முன்பு வால்மீகி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை திறப்பு விழா மற்றும் வால்மீகி ஜெயந்தி விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, வால்மீகி சிலையை திறந்து வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ளது போல் கர்நாடகத்திலும் தற்போது உள்ள இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்த அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஆதிதிராவிட மக்களுக்கு 17 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளோம். எங்கள் அரசு அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது.

வால்மீகி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வால்மீகி ஜெயந்தி விழா அர்த்தப்பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. மனிதகுல வாழ்வுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி கொடுத்தவர் வால்மீகி. இவருடைய கொள்கைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடகத்தில் வறட்சி ஏற்பட்டது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. மாநில மக்களிடம் குறிப்பாக விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிகிறது. வால்மீகி ஆராய்ச்சி மையத்தை அமைக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story